கருணை

கருணை

நாம் அயர்ந்து உறங்குவதை

உறுதி செய்து கொண்டபின்

தனது வழக்கமான நடைபயணத்திற்குக் கிளம்புகிறது

நமது வீடு.

தனது பெருத்த உடலுக்கேற்றார் போல

வீதிகள் நிர்மானிக்கப்படுவதில்லையென்கிற குறை

அதற்கு எப்பொழுதும் உண்டு.

தொடர்ந்து சீரான வேகத்தில் நடந்து கொண்டேயிருக்கிறது அது.

வீடுகளின் மனிதர்களையும்,

மனிதர்களின் வீடுகளையும்

உன்னிப்பாக கவனித்துக் கொள்கிறது.

தெருக்களில் உறங்குகிற குடும்பமொன்றின்

கைக்குழந்தையைத் யாரும் பார்க்காதபடித் தூக்கி

தனது தூளியில் சிறிது நேரம் வைத்துக் கொள்கிறது.

நடப்பதற்கான வழியும், வெளியுமற்றிருக்கிற

அடுக்குமாடிக் குடியிருப்பொன்றின்

தீராதப் புலம்பல்களைப் பொறுமையுடன்

கேட்டு கொள்கிறது.

நீண்ட நடையால் அயர்ந்து போய்,

எரியாத தெருவிளக்கொன்றின் கீழ்

நின்று இளைப்பாறும் பொது,

கருமேகங்கள் திடீரெனக் கவிழ்வதைக் கண்டுகொண்டு

பதறியடித்து அவசரமாக நம்மிடமேத் திரும்பி விடுகிறது

நமது வீடு!

நிதானமாக உறங்கியெழுகிற நாம்

முன்னும் பின்னுமாயிருக்கும்

மூன்று பூட்டுகளையும்,

நான்கு தாழ்ப்பாள்களையும்

நிம்மதியாகத் திறக்கிறோம்,

வீடுகளின் அதீதக் கருணையினால்!

Advertisements

தனிமையின் இசை

தனிமையின் இசை

உங்களில் எத்தனை பேர் இந்நேரம் தனிமையாக உணர்கிறீர்கள்? நீங்கள் ஒரு நெரிசலான இரயிலிலோ, கூட்டம் நிரம்பி வழிகிற மதுக்கூடத்திலோ, ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிற உங்கள் அன்புக் குழந்தையின், துணையின்  அருகிலோ இருக்கலாம். தனிமையென்பது இவையனைத்திற்கும் அப்பாற்பட்டது. அது எங்கும் விரவிக் கிடக்கிற இருளைப் போன்றது. நம்முடைய ஆயிரம் விளக்குகள் அதை ஒன்றும் செய்யவியலாது உறங்கிப் போகும். எங்காயினும், எவ்வாறாயினும், ஒவ்வொரு மனிதனுக்கும் உரித்தானது தனிமை மட்டுமே!

நமக்கு வேறு வழிகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு மேல் உதாசீனப்படுத்துவது அவசியமற்றது. ஒரு மகிழ்ச்சியை, ஒரு நெகிழ்வை, ஒரு காதலை எதிர்கொள்வது போல, நம் இரு கைகளையும் விரித்து தனிமையையும் அரவணைத்துக் கொள்வோம்.

நான் தனிமையாக உணரும் போது, இப்பாடலைக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

Wang Kar Wai-ன் மிகப் பிரசித்தியான படங்களில் ஒன்றான “In the mood for love”-ல் வரும் பின்னணி இசை இது. அவரது படங்களில், மனிதர்கள் பெருநகரத்தில் வசிக்கிறார்கள், பலருடன் உரையாடுகிறார்கள். ஆனாலும், தனியாகவே இருக்கிறார்கள். இப்பாடலின் காட்சியில் கூட, அவள் அந்த உணவங்காடியில் தினமும் வாங்கிச் செல்வது தனிமையைத் தான். அவன் அச்சிறு விளக்கொளியில் தனிமையைத் தான் புகைக்கிறான். அந்நகரத்தில், தனிமை தான் மழையாகப் பொழிகிறது.

Wang Kar Wai-ன் 2046-லிருந்து, மற்றொரு தனிமையின் பாடல் இது,.

Chungking Express,  அவரது படைப்புகளில் எனக்கு மிகப் பிடித்தது. இப்படத்தில், பிரதான கதாபாத்திரமே, Hong Kong நகரம் தான். இப்படம் காட்டுவது, நகரத்தின் புழுக்கத்தையல்ல, அது சுவாசிக்கும் தனிமையை.

 

இப்பாடல்கள் செய்வது ஒன்று தான், தனிமையின் விளிம்பில், நின்று கொண்டிருப்பவனை அதன் சுழற்சிக்குள் இழுத்துக் கொள்வது. நாம் செல்ல வேண்டியதும் அங்கு தான், தனிமையின் சுழற்சிக்குள்!

Tata tototo tee tee tee

கடந்த வாரம், குறிப்பாக புதன்கிழமை, ராம் “Masterclass with Anurag Kashyap” பற்றி நினைவூட்டியது முதற்கொண்டு, இந்த பாடலை இடைவெளியின்றி முணுமுணுத்துக் கொண்டேயிருந்தன உதடுகளும், மனமும்.

அனுராக் கஷ்யப் பற்றிய அறிமுகம் எப்படிக் கிடைத்து, எப்படி “Dev D” பார்த்தேன் என்பது அவசியமற்றது மட்டுமின்றி நினைவுமில்லை என்பதால் அதைத் தவிர்த்து விடுவோம்! ஆனால், Sanjay Leela Bhansali-யின் “தேவ்தாஸ்”யை ஹிந்திப் படங்கள் அரிதாக ரிலீசாகிற திருச்சியில், தனியே மீனா தியேட்டரில் போய்ப் பார்த்த நினைவிருக்கிறது. TV-க்களில் அடிக்கடி ஒலித்துக் கொண்டிருத்த அப்படத்தின் பாடல்களோ, மாதுரி தீட்சித்தோ, தெரிந்த ‘தோடா தோடா’  ஹிந்தியோ, அப்படியொரு அபாயகரமான முடிவுக்கு என்னைத் தள்ளியிருக்கக்கூடும். வீம்பாகக் கிளம்பிப் போனதாலோ என்னவோ, அப்படம் எனக்குப் பிடித்திருந்ததாகவே நெடுநாள் நம்பிக் கொண்டிருந்தேன். Dev-D பார்த்த அக்கணத்தில், Devdas-ன் எஞ்சியிருந்த அத்தனை நினைவுகளும் அழிந்து பாவ விமோசனம் கிட்டியது போல் தோன்றியது.  (இப்போதெல்லாம் பன்சாலியின் படங்களைப் போஸ்டர்களில் கூட பார்ப்பதில்லை என்பதில் அதிகவனமாக இருக்கிறேன்!)

Dev D-க்குப் பிறகு அனுராகின் Black Friday, Gulaal, Gangs of Wasseypur, Ugly மற்றும் Raman Raghav என பெரும்பாலான படங்களைத் தேடிப்பிடித்து பார்த்திருக்கிறேன். Raman Raghav பார்த்ததாகச் சொன்ன போது ராம், “படம் பிடித்திருக்கிறதா?” எனக் கேட்டார். “அவரின் படங்கள் பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்கிற எல்லைகளிலிருந்து தாண்டி நாட்களாகின்றன” என்றேன்.

வாழ்க்கையில் மறந்து போய்விடுகிற எத்தனையோ விஷயங்களைப் போல, 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்புகள் குறித்த படமான “Black Friday” குறித்த நினைவுகளும் அனுராக் உடனான கலந்துரையாடலின் பொழுது நினைவுக்கு வர, இன்று அதை திரும்பப் பார்த்தேன்.

ஒரு காவல்துறை விசாரணையில் படம் தொடங்குகிறது. அழுதுகொண்டே ஒருவன் சொல்கிறான்,

“மும்பை முழுக்க குண்டுகள் வெடிக்கப் போகின்றன”.

அதிகாரி, “நீயா?” எனக் கிண்டலும் அவனை அறைந்துவிட்டு நகர்கிறார். மூன்று நாட்களில் மும்பை முழுக்க குண்டுகள் வெடிக்கின்றன. அதன் பின்பான நீண்ட விசாரணைகளுக்கூடாக குண்டுவெடிப்பின் பின்னணியிலுள்ள மனிதர்கள், திட்டங்கள், காரணங்கள், கனவுகள், முட்டாள்தனங்கள், ஏமாற்றங்கள், கைவிடப்படுதல்கள், கோபங்கள், குரூரங்கள் என அத்தனையையும்  நிதானமாக விவரிக்கிறது படம்.

காலவரிசைப்படி அடுக்க வேண்டுமானால், படம் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6, 1992 – ல் தொடங்குவதாகச் சொல்லலாம். அதன் பின்பு, மும்பையில் நிகழ்ந்த இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலான தொடர் கலவரங்களில் கிட்டத்தட்ட 900 பேர் கொல்லப்படுகிறார்கள், பெரும்பாலும் முஸ்லிம்கள். (வரலாற்றின் துயர பக்கங்களை இப்படி போகிறபோக்கில் ஒரு வரியில் சொல்வது மிக அபத்தமானதாகத் தான் இருக்கிறது!) இக்கலவரம் மூன்று தரப்புகளை மையமிடுகிறது –  இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் அதிகார மையம். ஏற்கனவே மசூதி இடிப்பின் பின்பான அவநம்பிக்கையிலிருக்கிற முஸ்லிம்கள், மேலும் இந்துத்துவர்களின் திட்டமிட்டத் தாக்குதல்களாலும், காவல்துறையின் அலட்சியத்தாலும், ஆணவத்தாலும், அதிகாரத்தாலும் கொல்லப்பட, கையறு நிலையின் விளிம்புக்குத் தள்ளப்படுகிறார்கள். அவர்களின் வலியை மற்றவர்கள் (சமூக விரோத சக்திகள் என்பது க்ளிஷேவானது மட்டுமல்ல, பொருத்தமற்றது என்பது படம் பார்த்தால் விளங்கும்) சுரண்டி, குண்டுவெடிப்புகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

படத்தில் எனக்கு மிகப் பிடித்த கதாபாத்திர வடிவமைப்பு “பாதுஷா கான்” என்கிற கோபமான இளைஞனுடையது. குண்டுவெடிப்பை நிகழ்த்திய பிறகான பாதுஷாவின் பயணம் ஒரு அத்தியாயமாக வருகிறது. ராம்பூர், டெல்லி, ஜெய்ப்பூர், கல்கத்தா – என வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று தலைவன் Tiger Memon-ஆல் அலைக்கழிக்கப்படுகிறான். ஒரு கட்டத்தில் தன் பாஸ்போர்ட் எரிக்கப்பட்டு விட்டதையும், துபாய்க்குத் தப்பிப்பது இயலாத காரியம் என்பதையும், தான் அவர்களின் சுயநலத்திற்காக பயன்படுத்தப்பட்டிருககிறோம் என்பதையும் புரிந்து கொள்ளும் தருணம் அழகானது. சமூகமும், அரசும் தங்களை நிராகரித்ததற்காக வன்முறையாளர்கள் பக்கம் சென்ற அவன், மீண்டும் நிராகரிப்பின் வலியை உணர்கிறான். பிடிபட்ட பிறகு அவன் சொல்கிறான், “அல்லா எங்கள் பக்கம் இருக்கிறார், அதனால் தான் நாங்கள் இதில் வெற்றி பெற்றிருக்கிறோம்”.

அதற்கு அதிகாரி ராகேஷ் மரியா சொல்கிறார், “அல்லா எங்கள் பக்கம் தான் இருக்கிறார், இல்லையெனில் நீ இந்நேரம் இங்கே இருந்திருக்க முடியாது!”

எளிய மனிதர்கள் மிக எளிதாக தன தேசத்துக்காக, மதத்துக்காக, குழுக்காக, சாதிக்காக, மொழிக்காக அர்த்தமற்ற வன்முறைகளில் இழுக்கப்படுவது வரலாற்றில் திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டேதானிருக்கிறது.  அப்படி ஒரு வன்முறையை நிகழ்த்திக் காட்டுவதற்கு ஒவ்வொரு காலத்திலும் யாரோ ஒரு நல்ல பேச்சாளன் போதுமானதாயிருக்கிறான், ஏதோ ஒரு துர்கணம் போதுமானதாயிருக்கிறது. அத்தனை வலிமையற்றதா மனித மனது? குரூரத்தின் கைபிடித்து நடந்து செல்ல நம் மனம் எந்நேரமும் ஆயத்தமாயிருக்கிறதா என்ன? எவையெல்லாம் காரணமாயிருக்கின்றன? அகங்காரம்? கோபம்? கைவிடப்படுதலின் வலி? என ஓராயிரம் காரணங்களில் ஒன்றை பிரித்தெடுப்பது இயலாத காரியமெனத் தோன்றுகிறது.

இப்படம் எந்த தரப்பையும் பேசாமல், நிகழ்வுகளை, மனங்களைப் பேசுவதாலேயே மிக முக்கியமான ஒன்றாகத் தோன்றுகிறது. சில சமயங்களில், அத்தனை தரப்பையும் பேசுவதாகவும் படுகிறது. குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளியான Tiger Memon வீட்டுக்கு சோதனையிடச் செல்கிறார்கள். Rakesh Maria, ஒவ்வோர் இடமாகத் தேடிக் கொண்டே பிரிட்ஜைத் திறந்து பார்க்கிறார். எதுவும் இல்லாமல் மூடி விடுகிறார். திடீரென எதையோக் கண்டவராக திரும்பத் திறக்கிறார். அடுத்த காட்சியில், அவர் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்! கூடவிருக்கும் கான்ஸ்டபிள் அவரை விசித்திரமாகப் பார்க்க, அவர், “இன்னும் நிறைய இருக்கிறது. எல்லாரும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்கிறார். ஷோபா சக்தி போன மாதம் இங்கு வந்த போது சொன்னது நினைவுக்கு வந்தது, “பசி தான் உலகிலேயே கொடுமையானது!”.

இப்படத்தில் பிரபலமான காட்சி ஒன்று உண்டு. போலீஸிடமிருந்து தப்பித்து ஒருவன் ஓடுகிறான். கிட்டத்தட்ட ஆறேழு காவலர்கள் அவனைத் துரத்துகிறார்கள். பிடிபடுவதும், தப்பிப்பதுமாக தாராவியின் நெருக்கலான சந்துகளுக்குள் துரத்தல் இடைவிடாமல் தொடர்கிறது. அவனால் ஓடவியாலாமல் போகும் போது, துரத்துகிறவர்களாலும் முடியாமல் போகிறது. தப்பிக்கவியலாது என்பது தெரிந்திருந்தும் அவன் காரணமேயின்றி ஓடுகிறான். வாய்ப்பில்லை என்பது தெரிந்திருந்தும் கான்ஸ்டபிள் அவனிடம் மன்றாடுகிறார், “ஏ, ருக் ஜா யார்!”. தெருக்கள் வலைப்பின்னலைப் போல அவர்களை உள்ளிழுத்துக் கொள்ள, திரும்பத் திரும்ப அங்கேயே சுற்றி வருகிறார்கள். மொத்த துரத்தலும் ஓர் அபத்த நாடகமாகத் தோன்றுகிறது. ஒருவேளை மனித மனமே  அபத்தத்தின் சுழற்சியில் தான் இயங்குகிறதோவெனக் குழப்பமாயிருக்கிறது!

அல்லது, அபத்தத்தின் எல்லையில் சிக்கிக்கிடக்கிற அர்த்தத்தைத் தேடித் தான் தீராது துரத்தல்கள் நிகழ்கின்றனவோ என்னவோ!

blackfriday2